‘146 ரன்; 18 சிக்ஸர்’ – டி20-யில் எதிரணியை மிரளவைத்த கெய்ல்!

  0
  45

  இந்தியன் பிரிமியர் லீக்கான ஐபிஎல் போல வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் (பிபிஎல்) தொடர் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது. வங்க தேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் இன்று தாக்கவில் நடந்து வருகிறது. இதில், தாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்கு போட்டா போட்டிப் போட்டு வருகின்றன.

  கிறிஸ் கெய்ல்

  இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற தாக்கா டைனமைட்ஸ், ரைடர்ஸை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. அந்த அணி சார்பில், கிறிஸ் கெய்ல், தொடக்க வீரர்களில் ஒருவராகக் களமிறங்கினார். கடைசி வரை நின்றாடிய கெய்ல், 69 பந்துகளுக்கு 146 ரன்கள் எடுத்து அதகளப்படுத்தினார். எதிர் முனையில் கெய்லுக்கு பார்ட்டனராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கலம் அவருக்குக் கைகொடுத்தார். அவரும் இறுதிவரை களத்தில் நின்று 51 ரன்கள் எடுத்தார். ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில், ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தி உள்ளனர். கெய்லின் 146 ரன்களில், 18 சிக்ஸரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒரு தனி நபரால் அடிக்கப்படும் அதிகபட்ச சிக்ஸர் இதுவேயாகும். இதையடுத்து, களமிறங்கிய டைனமைட்ஸ் அணி, 9 ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்காததால், அந்த அணி தோல்வியைத் தழுவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரைடர்ஸ் வெற்றிபெறும் பட்சத்தில், கெய்லுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  LEAVE A REPLY